• Login / Register
  • செய்திகள்

    மாநிலங்களவைத் தேர்தல்: நண்பகல் 12 மணிக்கு ப சிதம்பரம் வேட்புமனு தாக்கல்

    தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்கள் உட்பட 57 இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருக்கின்றது.

    இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களில் மூன்று இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசும் போட்டியிடுகிறது.

    இதில், திமுகவின் மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்களாக தஞ்சாவூர் சு.கல்யாணசுந்தரம், ஆர்.கிரிராஜன், கே.ஆர்.என்.ராகேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற குழப்பம் நிலவி வந்தது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுவார் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.


    இதனையடுத்து, ப.சிதம்பரம் இன்று நண்பகல் 12 மணியளவில், 10 எம்.எல்.ஏ.க்கள் கையொப்பத்துடன் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

    இதனிடையே, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை ப சிதம்பரம் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி வாழ்த்துகளைப் பெற்றார்.

    மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மே 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

    வேட்பு மனுக்கள் மீதான மறுபரிசீலனை ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.  வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு, ஜூன் 3ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மாநிலங்களவைத் தேர்தல், ஜூன் 10ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது.

    அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


    Leave A Comment