• Login / Register
  • செய்திகள்

    தமிழகத்தில் வன்முறை, சாதி சண்டை இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தமிழக சட்டப் பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

    இந்த விவாதத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், ‘தமிழகத்தில் விரைவில் 3 ஆயிரம் காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். காவல்துறையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு நிச்சயம் கடைபிடிக்கப்படும்.

    ரூபாய் 6.47 கோடி மதிப்பீட்டில் காவல்துறையினருக்கான அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கப்படும்.

    கஞ்சா, குட்கா போதைப் பொருள்கள் புழக்கம், கடந்தாண்டை விட குறைந்துள்ளது. விரைவில் போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விநியோகம் செய்பவர்கள், கடத்துபவர்களை கண்காணித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கூலிப்படைகள், கொலைகள் முற்றிலுமாக குறைந்துள்ளன.

    தமிழ்நாட்டை கூலிப்படையே இல்லாத மாநிலமாக உருவாக்க காவல்துறை முனைப்பு காட்டிட வேண்டும்.


    ஆளும் கட்சி, எதிர்க் கட்சி அழுத்தங்கள் மற்றும் சிபாரிசுக்கு அடிபணியாமல் காவல்துறையினர் செயல்பட வேண்டும்.

    விசாரணை கைதிகளை துன்புறுத்துதல், மரணம் எந்த ஆட்சியில் நடந்து இருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை. லாக் அப் மரணங்கள் இனி கண்டிப்பாக நிகழாது என உறுதியளிக்கிறேன்.

    தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கருத்தியல் சுதந்திரம் அளிக்கப்பட்டாலும், அது அநாகரிகமாக மாறும் போது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    தமிழகத்தில், வன்முறை, சாதிச் சண்டைகள், மத மோதல்கள், மற்றும் துப்பாக்கிச் சூடு இல்லை. இந்தியாவிலேயே அமைதியான, பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்ற நற்பெயர் கிடைத்திருக்கிறது’ என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது உரையில் குறிப்பிட்டார்.


    Leave A Comment