• Login / Register
  • செய்திகள்

    குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி மீண்டும் கைது

    குஜராத் மாநிலம் வட்கம் தொகுதியின் எம்.எல்.ஏ.வான ஜிக்னேஷ் மேவானி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டார்.

    இதுபற்றி, அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி அரூப் குமார் தேவ், ஜிக்னேஷ் மேவானி மீது, கோக்ரஜ்ஹர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து, ஜிக்னேஷ் மேவானியை கடந்த 20ஆம் தேதி அசாம் காவல்துறையினர் கைது செய்தனர்.

    காவல்துறையினர் ஜிக்னேஷ் மேவானி மீது, இரு பிரிவினரிடையே பகைமையை ஊக்குவித்தல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் அவமதித்தல், சதிச் செயல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில், ஜிக்னேஷ் மேவானிக்கு அசாம் நீதிமன்றம் இன்று நீதிமன்ற பிணை வழங்கியது.

    நீதிமன்ற பிணை கிடைத்த சில மணிநேரங்களிலேயே எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானியை பார்பெட்டா காவல்துறையினர் மற்றொரு வழக்கில் மீண்டும் கைது செய்தனர்.

    ஜிக்னேஷ் மேவானி மீது இந்திய தண்டனைச் சட்டம் 294, 354, 353 மற்றும் 323 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இந்த நிலையில், ஜிக்னேஷ் மேவானி செய்தியாளர்களிடம், ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சதி காரணமாகவே தன்னை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.

    ரோஹித் வெமுலாவுக்குச், சந்திரசேகர் ஆசாத்துக்குச் செய்ததைப் போல், இப்போது என்னைக் குறிவைக்கிறார்கள் என்றும் ஜிக்னேஷ் மேவானி செய்தியாளர்களிடம் கூறினார்.


    Leave A Comment