• Login / Register
  • செய்திகள்

    2026-ல் அரசியல் என்ரி உறுதி - விஜயின் அறிவிப்பை கொண்டாடும் ரசிகர்கள்!

    நடிகர் விஜய்-இன் அரசியல் பிரவேசம் தொடர்பில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மூலம் அதனை உண்மையாக்கும் வகையில் விஜய் பேசியிருப்பது அவரது ரசிகர்களை குசிப்படுத்தியுள்ளது.

    தமிழ்த் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு இந்த வருகிறேன்... அந்தா வருகிறேன்... என கால் நூற்றாண்டுகளாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும் இன்று வரை அவரால் அரசியல் பிரவேசம் தொடர்பிலான கருத்துகளை துணிவாக கருத்தை கூற கூட முடியாத நிலையே நீடித்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் தொடர்பில் பேசப்பட்டு வருகிறது. கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது மட்டுமல்லாது விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் உதவித்திட்டங்களை விரிவுபடுத்தி 234 தொகுதிகளிலும் கட்டமைப்பை பலப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகளும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகிறது.

    விஜய்-இன் அரசியல் பிரவேசத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் திரைப்படங்களில் வசனங்கள், காட்சிகள் அமைக்கப்படும்போது ஆட்சியாளர்களது உச்சபட்ச நெருக்கடிகள் எற்படுத்தப்பட்டு வருவது கடந்த ஜெயலலிதா ஆட்சி முதல் தற்போதைய ஸ்டாலின் ஆட்சி வரை தொடர்கதையாகி வருகிறது.

    ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களது எதிர்ப்புகளை மீறி செயற்படுவதன் மூலம் திரைத்துறை எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தி முடக்குவதே இவ்வாறான அரசியல் நெருக்கடிகளின் பின்னணியாக பார்க்கப்படுகிறது.

    அந்தவகையில்தான் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையிடப்பட்டு வரும் லியோ திரைப்படத்திற்கு ஏற்பட்டுத்தப்பட்ட, ஏற்படுத்தப்பட்டு வரும் நெருக்கடிகள் அமைந்துள்ளன.

    இந்நிலையில், லியோ வெற்றி விழாவில் விஜய் பேசிய பேச்சு பல்வேறு தரப்பினராலும்  அலசப்பட்டு வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம், 540 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து வணிக ரீதியில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

    இந்த வெற்றி விழாவில் பங்கேற்க 6 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விழா தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் குவியத் தொடங்கினர். ரசிகர்களின் படைசூழ லியோ வெற்றி விழா பிரமாண்டமாக அரங்கேறியது. விழாவில் லியோ படக்குழுவினர் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றனர்.

    விழாவின் இறுதியில் தளபதியின் குட்டி ஸ்டோரிக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு பல விஷயங்கள் குறித்து ஓப்பனாக பேசி நடிகர் விஜய் இன்ப அதிரிச்சி கொடுத்தார். அவரது பேச்சு, இதுவரை அவர்மேல் வைக்கப்பட்ட விமர்சங்களுக்கு விடையும், முற்றுப்புள்ளியும் வைக்கும் வண்ணம் இருந்தது. 

    இந்த நிலையில், லியோ வெற்றி விழாவில் 2026 ஆம் ஆண்டு குறித்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய்யிடம் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு முதலில் பதிலளித்த விஜய் 2025 க்கு பிறகு வரும் ஆண்டு 2026 என்று சிரித்துக்கொண்டே பதில் கூறினார். எங்களுக்காக சீரியஸ் ஆகா பதில் கூறுங்கள் என்று தொகுப்பாளர் கேட்க, மீண்டும் சிரித்துக் கொண்டே உலகக்கோப்பை கால்பந்து நடக்கவுள்ளது என்று கூறினார்.

    பின்னர் சில வினாடிகள் கழித்து ரசிகர்களை நோக்கி, "2026 - இல் கப்பு முக்கியம் பிகிலு" என்று கூற, ரசிர்கள் ஆரவாரத்துடன் "வா தளபதி.. வா தளபதி.." என்று  உற்சாக ஒலி எழுப்பினர்.

    இதன் மூலம் நிச்சயம் 2026 தேர்தலில் விஜய் போட்டியிடுவார் என்று அவர் பேசிய காணொளியை  ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

    Leave A Comment