• Login / Register
  • செய்திகள்

    எல்லை தாண்டலை தடுக்க முடியாது - கைவிரித்த டக்ளஸ்!

    இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் எல்லைதாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்துவதில் இலங்கை கடற்படையினர் தயக்கம் காட்டிவருவதால் இப்பிரச்சினையை தடுக்க முடியாதுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

    வடக்கு மாகாண கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் தமிழ்நாட்டு இழுவைப்படகுகளால் வட மாகாண மீனவர்களது வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்பட்டு வருகிறது.

    போர் காலத்தில் சொல்லொனாத் துயரங்களை சந்தித்த வடக்கு மீனவர்கள் போருக்கு பின்னர் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப கடலை நம்பியிருந்த நிலையில் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டு மீனவர்களால் நித்தமும் துயரத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி வரும் மீன்பிடி படகுகளை தடுத்து நிறுத்தி வடக்கு கடல் பகுதி மீதான இறையாண்மையை நிலைநாட்டி கடல் வளத்தையும் மீனவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய நிலையில் அரசியல் காரணங்களுக்காக கண்டுகொள்ளாதிருப்பது இரு தரப்பு மீனவர்களையும் நேரடியாகவே மோதவிடும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

    இலங்கை இந்திய தரப்பில் கடற்றொழில் அமைச்சர் மற்றும் இணை அமைச்சர்களாக டக்ளஸ் தேவானந்தா, எல் முருகன் ஆகியோர் உள்ள நிலையில் கூட தீர்வு காணப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருவது வடக்கு மீனவர்களை பெரிதும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.

    இந்நிலையில், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இன்றைய கூட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போது, எல்லை தாண்டிய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியதுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

    குறிப்பாக வடபகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. அதற்கு கடந்த 20 வருட காலமாக நான் முயற்சித்து வருகின்றேன். இந்த அத்துமீறலை கட்டுப்படுத்துவதற்காக பல பேச்சுவார்த்தைகளிலும் நான் கலந்து கொண்டேன். ஆனால் அந்த பேச்சுவார்த்தைகளில் எந்த சாதகமான முடிவும் எட்டப்படவில்லை. அதேபோல இலங்கை கடற்படையினரும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதில் பின்னடிப்பதாகவே நான் கருதுகின்றேன்.

    நான் கடந்த சில நாட்களாக ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கின்றேன். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா சென்று இந்த விடயம் தொடர்பில் அங்குள்ள முதலமைச்சருடன் கலந்துரையாடி ஒரு உண்மையான நிலைமையினை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. அதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் என நம்புகின்றேன்.

    எனவே, எதிர்வரும் காலத்தில் இந்தியா சென்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது மீனவர்களின் உண்மையான நிலையினை இந்திய மீனவர்களுக்கு எடுத்துரைப்பதன் மூலம் இதற்கு ஒரு சாதகமான முடிவினை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

    மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்சனை, இலங்கையில் மாத்திரமல்ல இது ஏனைய உலக நாடுகளிலும் காணப்படுகின்றது இரு நாடுகளின் பிரச்சனை இரு நாடுகளுடனான பேச்சு வார்த்தை மூலமே தீர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.

    Leave A Comment