5 நாள்கள் மட்டுமே விடுமுறை: பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு
தமிழகம் முழுவதும் 2023 - 24ஆம் கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வுகள் இன்று நிறைவு பெற்றுள்ளது நிலையில் இதனை தொடர்ந்து விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்/ உயர்மேல்நிலைப் பள்ளிகளில் 6 - 12ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இம்முறை காலாண்டு விடுமுறை 5 நாட்கள் மட்டுமே விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக செப்.15-ஆம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு காலாண்டு தோ்வு தொடங்கி நடைபெற்று வந்தது. தோ்வுக்குப் பிறகு செப்.28 முதல் அக். 2-ஆம் தேதி வரை காலாண்டு தோ்வு விடுமுறை விடப்படுகிறது. இதையடுத்து, அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், 6 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.
வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு மாறாக, இந்த ஆண்டு கோடை வெயில் காரணமாக ஜூன் 13ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த ஆண்டு 9 நாள்கள் வரை காலாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 5 நாள்கள் மட்டுமே விடுமுறை விடப்பட்டுள்ளது.
Leave A Comment