• Login / Register
  • செய்திகள்

    மன்னிப்பு கேட்க முடியாது - அண்ணாமலை அதிரடி!

    அதிமுக - பாஜக கூட்டணி சர்ச்சை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் அண்ணா விவகாரத்தில் மன்னிப்பு கோட்க முடியாது எனவும் ஆக்ரோஷ அரசியல் தொடரும் எனவும் அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதிதுக - பாஜக கூட்டணி உரசல் போக்கு காலத்துக்கு காலம் ஒவ்வொரு வடிவத்தில் வெளிபடுவதும் பின்னர் சமரசமாவதுமாக இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இரு தரப்பு சொற்போர் ஆரம்பித்துள்ளது.

    அண்ணாவை விமர்சித்த அண்ணாமலை...

    சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபுவை பதவி விலக வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் கடந்த 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது பேசிய அண்ணாமலை, மதுரையில் 1956-இல் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பேசியதாகவும், பின்னர் முத்துராமலிங்க தேவர் ஆவேசம் அடைந்ததால் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து அண்ணா ஓடி வந்ததாகவும் கூறியிருந்தார்.

    திமுகவுடன் அண்ணாமலை கூட்டணி அமைத்து சதி - சிவி சண்முகம்...

    தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறக் கூடாது என்ற நோக்கத்தில் அண்ணாமலை திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

    அண்ணாமலைக்கு சாபம் விட்ட செல்லூர் ராஜூ

    அண்ணாவை பற்றி யார் தவறாக பேசினாலும் நாக்கு அழுகிவிடும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சாபம் விடுத்தார்.

    முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதா குறித்து அண்ணாமலை அவதூறாக பேசினால் அதிமுகவினர் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் அதிமுக தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

    10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை - அண்ணாமலை பதிலடி

    பின்னர், பேரறிஞர் அண்ணா சர்ச்சைக்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, யாருக்கும் அடிபணிந்து செல்ல வேண்டிய நிலை தனக்கு இல்லை, 10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை இது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    கோவை போத்தனூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேர்மை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்றும் கூறி இருந்தார்.

    தலைக்கணத்துடன் ஆடுகிறார் அண்ணாமலை - ஜெயக்குமார்

    இந்த விவகாரம் அதிமுக-பாஜக இடையே பெரும் பனிப்போரை உண்டாக்கியது.

    இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், தனித்து போட்டியிட்டால் அண்ணாமலை நோட்டாவுக்கு கீழ்தான் ஓட்டு வாங்குவார். கூட்டணியில் பாஜக இல்லை என்றால் அவர்களுக்குத்தான் இழப்பு. அதிமுகவுக்கு இழப்பு இல்லை. கூட்டணியில் பாஜக இல்லை என்றால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் சந்தோஷப்படுகிறான்.

    பாஜக மேலிடத்தில் கூறியும் அண்ணாமலை இப்படித்தான் பேசுகிறார் என்றால், பாஜக மேலிடம் சொல்லித்தான் பேசுகிறார் என்று அர்த்தம். சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டியதுபோல தலைக்கணத்துடன் ஆடுகிறார் அண்ணாமலை. காலம் வரும்போது அதிமுக மெகா கூட்டணி அமைக்கும். என்றார்.

    இதையடுத்து கூட்டணி தொடர்பில் சர்ச்சை எழுந்ததையடுத்து கூட்டணி தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அதிமுக, பாஜக தலைமைகளால் அறிவிக்கப்பட்டது.

    கூட்டணி குறித்த வார்த்தை சூடுகளை அதிமுக-வினர் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    பாஜக குறித்தும், பாஜக மாநில தலைவர் குறித்தும் அதிமுக நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிக்க வேண்டாம் என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

    இதனிடையே பாஜக மூத்த தலைவர்களுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் அண்ணாமலை தொலைபேசி வாயிலாக ஆலோசித்த நிலையில் அதிமுக உடனான கூட்டணி முறிந்ததா என இன்று அறிவிப்பார் என தகவல் வெளியாகியிருந்தது.

    அண்ணாமலை அதிரடி

    இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் அதிமுக - பஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    அதிமுக நிர்வாகிகள் கூறுவதற்கு தான் பதில் கூற முடியாது என்றும் மேலிடத்தில் தான் அதற்கு பதில் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனி மனித விமர்சனங்களை தான் முன்வைக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    மன்னிப்பு கேட்க முடியாது

    மேலும் அண்ணா குறித்து தரக்குறைவாக எங்கேயும் எப்போது பேசியதில்லை, சரியாகவே பேசியுள்ளேன் என விளக்கமளித்த அண்ணாமலை, அண்ணா குறித்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    ஆக்ரோஷ அரசியல் தொடரும்

    தன்மானத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்ய முடியாது என்றும் ஆக்ரோஷமாகத்தான் நான் அரசியல் செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Leave A Comment