கனடா வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை; அநாவசிய பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!
மிக மிக அவசியமான பயணங்களை தவிர ஏனைய பயங்களை தவிர்க்குமாறு கனடா வாழ் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

கனடாவின் சுர்ரே நகரில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி கொல்லப்பட்ட விவகாத்தை அடிப்படையாக கொண்டு கனடா - இந்தியா இடையே ஏற்பட்டுள்ள இராஜதந்திர முறுகல் நிலையை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசால் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சீக்கியர்களுக்கு இந்தியாவிடம் இருந்து தனி நாட்டை பெறுவதற்கு ஹர்தீப் சிங் முயற்சி மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் - ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அத்துடன், கனடா மண்ணில் வெளிநாட்டை சேர்ந்த எவரும் இங்கு வசிக்கும் குடிமகனை கொல்வது என்பது ஏற்க முடியாதது. அது கனடாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை வெளிக்கொண்டுவர கனடா அரசுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து இந்த விவகாரம் இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே புகாரை பிரதமர் மோடியை சந்தித்தபோது கனடா பிரதமர் ட்ரூடோ கூறியதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இராஜதந்திர முறுகல் நிலையாக மாறிய இந்திய - கனடா உறவு
இந்தநிலையில், ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் உள்ள தூதரக அதிகாரி பவன் குமார் ராயை, வெளியேற்றுவதாக அந்தநாட்டு வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி அறிவித்தார்.
அதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சு, நேற்று முன்தினம் தமது நாட்டிலுள்ள கனேடிய தூதரக அதிகாரி ஒருவருக்கு ஐந்து நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது.
இந்தநிலையில், கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள கனேடியர்களுக்கு கனடா எச்சரிக்கை
இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் போது அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமெனஇ இந்தியாவிலுள்ள தமது பிரஜைகளுக்கு கனடா பயண ஆலோசனையை வெளியிட்டிருந்தது.
கனாடாவில் உள்ள இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர், கனடாவில் உள்ள தமது பிரஜைகளை இந்தியத் தூதரகங்களில் பதிவு செய்யுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
கனடாவிலுள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு, அறிவுறுத்தபபட்டுள்ளதுடன், ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் அல்லது டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பதிவு செய்ய வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Leave A Comment