• Login / Register
  • செய்திகள்

    இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி - ஆய்வில் தகவல்!

    இலங்கையின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் ஏற்பட்ட வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் போராட்டம் தீவிரமடைந்து ஆட்சியில் இருந்த ராஜபக்சேக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அவர்கள் இடத்தில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அதிகாரத்தை தலைமையேற்று நடத்தி வந்தாலும் பொருளாதார நெருக்கடி நிலையில் எவ்வித மாற்றங்களும் இன்றி நீட்டித்து வருகிறது.

    மேலோட்டமான அறிவிப்புகள் மூலமாக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்த அரசு வெளிப்படுத்தி வந்தாலும் மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்படாத நிலை நீட்டித்து வருவதாக பலதரப்பாலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி நிலையை சந்தித்திருப்பது ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    2022 ஆம் ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டின் பொருளாதாரம் 3.1% வீழ்ச்சியடைந்துள்ளதாக மக்கள்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

    2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,683,374 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், இது இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் 2,597,441 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.

    2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் விவசாய நடவடிக்கைகள் 3.6 சதவீதத்தால் விரிவடைந்த அதேவேளை கைத்தொழில் மற்றும் சேவை நடவடிக்கைகள் முறையே 11.5 சதவீதமாகவும் 0.8 சதவீதமாகவும் வீழ்ச்சியுற்றுள்ளதாக மக்கள்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    Leave A Comment