• Login / Register
  • செய்திகள்

    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

    வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

    வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று மேற்கு வங்கம், ஒடிசா கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாள்களுக்குள் மேலும் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா - தெற்கு ஜார்கண்ட் நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இதன்காரணமாக ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், 

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செப் 19 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையை பொருத்தவரை.. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

    மீனவர்கள் செப்.19(இன்று) குமரிக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாளில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது. 


    Leave A Comment