• Login / Register
  • செய்திகள்

    இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கனடா தூதருக்கு உத்தரவு!

    கனடா தூதரக அதிகாரியை இந்தியாவைவிட்டு வெளியேறுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்  உத்தரவிட்டுள்ளது.

    கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடாவைவிட்டு வெளியேற அந்நாட்டு அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

    இந்த நிலையில், இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரி கேமரூன் மேக்கேவை நேரில் ஆஜராக மத்திய வெளியுறவுத் துறை சம்மன் வழங்கியிருந்தது.

    இதனைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் இன்று காலை ஆஜரான கேமரூனை 5 நாள்களுக்குள் இந்தியாவைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால், இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    முன்னதாக, இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புப் போராடி வருகிறது. கனடாவில் இருந்துகொண்டு, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசிடம் இந்தியா பல முறை வலியுறுத்தியும் இருக்கிறது.

    இந்த நிலையில், காலிஸ்தான் டைகர் படைப்பிரிவு தலைவர் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்தக் கொலையில், இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக, காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒரு சில புகைப்படங்களுடன் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

    இதனை அடிப்படையாக வைத்து, நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அரசு அதிகாரிகளுக்கும், காலிஸ்தான் தலைவர் கொலைக்கும் தொடர்பிருப்பதற்கான குற்றச்சாட்டுகள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

    ஆனால் இதனை இந்தியா மறுத்திருந்தது. உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்திருந்தது.

    கனடா பிரதமரின் பேச்சைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுகையில், இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம் என்று அறிவித்தார்.

    கனடா அரசு, இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியிருந்த நிலையில், இந்தியாவுக்கான கனடா நாட்டின் தூதரக அதிகாரியை இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.




    Leave A Comment