• Login / Register
  • செய்திகள்

    திலீபன் நினைவு ஊர்திக்கு அனுமதி; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி பயணத்தில் சிங்கள காடையர்கள் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலை அடுத்து சிறிலங்கா பொலிசார் தொடுத்த வழக்கில் வவுனியா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 'திலீபன் வழியில் வருகின்றோம்' என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    குறித்த ஊர்திப் பவனியானது நேற்று திருகோணமலை கப்பல்துறை பகுதியை கடக்கமுற்பட்டபோது சிங்கள காட்டுமிராண்டி வன்முறை குழு ஒன்றினால் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.

    இச்சம்பவம் உலகத் தமிழர்கள் உள்ளிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு மத்தியில், தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி நேற்று இரவோடு இரவாக வவுனியாவை வந்தடைந்தது.

    இந்நிலையில், குறித்த ஊர்திப் பவனி வவுனியாவில் இடம்பெற்றால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், இன நல்லுறவு சீர்குலையும் என இருவர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர்.

    குறித்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த ஊர்திப் பவனிக்கு பொலிசார் வவுனியா நீதிமன்றில் தடை உத்தரவு கோரியிருந்தனர்.

    அதனை கவனத்தில் எடுத்த மன்று, இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி, பொலிசாரின் கோரிக்கையை நிராகரித்ததுடன், இன முரண்பாடுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Leave A Comment