• Login / Register
  • செய்திகள்

    புதிய நிபா தொற்றுகள் இல்லை: கேரள சுகாதாரத் துறை அறிவிப்பு

    மாநிலத்தில் புதிய நிபா தொற்றுகள் பதிவாகவில்லை என கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்தாா். நிபா தொற்று பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட 42 மாதிரிகளில் தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்படாததையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இது தொடா்பாக கோழிக்கோட்டில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்த 42 நபா்களின் மாதிரிகள் தொற்று பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அவற்றில் தொற்றுப் பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை என முடிவுகள் வந்துள்ளன.

    கடந்த 2018-இல் நிபா தொற்றுப் பாதிப்பு பதிவான இடங்களில் மத்திய அரசு அனுப்பிய குழு ஆய்வு நடத்தி வருகிறது. அப்பகுதிகளில் ஏதேனும் சூழலியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அந்தக் குழு ஆராயும்.

    புணேயில் உள்ள தேசிய தீநுண்மியல் கழகமும் (என்ஐவி) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆா்) மாவட்டத்தில் களஆய்வுகளை நடத்தி வருகின்றன. நிபா தீநுண்மியின் மரபணுவை வரிசைப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நிலை சீராக உள்ளது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வரும் 9 வயது சிறுவனின் உடல்நிலையும் மேம்பட்டுள்ளது.

    தொற்றுப் பாதிப்பு இறுதியாகப் பதிவு செய்யப்பட்டதிலிருந்து 42 நாள்கள் வரை இத்தகைய நோய்ப்பரவல் தடுப்புக்கான எச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

    மாநிலத்தில் 6 நிபா தொற்றுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 4 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறன்றனா். 2 போ் உயிரிழந்தனா்.




    Leave A Comment