• Login / Register
  • செய்திகள்

    கர்நாடக எல்லையை முற்றுகையிட்டு போராட்டம்!

    காவிரியில் தண்ணீர் வழங்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தியும் கர்நாடக எல்லையை முற்றுகையிட்டு ஓசூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

    தமிழ்நாட்டில் காவிரி பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடாமல், பங்கிட்டு வழங்காமல் தொடர்ந்து அடாவடி போக்கை கையாண்டு வருகிறது.

    கர்நாடக அரசின் இச் சயெற்பாட்டிற்கு தமிழகத்தில் இருக்கும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பல்வேறு கட்சிகளும் அழுத்தம் கொடுக்கும் வகையிலான எதிர்ப்பினை வெளிப்படுத்தாது ஒப்புக்கு அறிக்கைகளை விடுத்து வருகின்றன.

    இதனால் தமிழ்நாட்டில் உள்ள காவிரி விவசாய நிலங்கள் சுமார் 5 லட்சத்திற்கு மேல் பாதித்து அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கருணையின்றி தொடர்ந்து கர்நாடகா அரசு தமிழ்நாட்டு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கர்நாடக மாநில எல்லையில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் அங்கிருந்து பேரணியாக கர்நாடக மாநில எல்லையை நோக்கி காலிக் குடங்களுடன் புறப்பட்டனர். அப்போது, கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி சென்றனர்.

    ஓசூர் உள்வட்ட சாலை சந்திப்பு அருகே பேரணி வந்தபோது, அவர்களை அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தனர். இதையடுத்து, விவசாயிகள் அப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் மறியல் நீடித்தது. பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    முற்றுகை போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, மாநில தலைவர் இரா. சண்முகசுந்தரம், இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் நல்லா கவுண்டர் உள்ளிட்ட நிர்வாகிகள், சங்கத்தின் உறுப்பினர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Leave A Comment