சிங்கப்பூர் அதிபராக ஈழத்தமிழர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி!
சிங்கப்பூரின் 9 ஆவது ஜனாதிபதியாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஈழத்தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட இரு வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளைவிட 10 இலட்சத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்று தர்மன் சண்முகரத்தினம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார்.

1965-ஆம் ஆண்டில் மலேசியா கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்று, சிங்கப்பூர் குடியரசாக மாறியது. அதன் பிறகு அதே 1965-ஆம் ஆண்டில் அதிபர் எனும் சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது.
1993-க்கு முன்னர், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தால் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991-இல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களின் விளைவாக, குடியரசுத் தலைவர் பதவியானது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவியாக மாறியது.
இவ்வாறு கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது சிங்கப்பூர் குடியரசுத் தலைவராக (அதிபர்) உள்ள அலிமா யாகோப்பு-வின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில் சிங்கப்பூரின் 9 ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று (01) வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளில் 70.4 சதவீத வாக்குகளை பெற்று தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார்.

அவருடன் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்கள் இங் கொக் சொங், டான் கின் லியான் இருவரும் தர்மனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
தேர்தல் முடிவுகள்
தர்மன் சண்முகரத்னம் – 70.40% (1,746,427 வாக்குகள்)
இங் கொக் சொங் – 15.72%(390,041 வாக்குகள்)
டான் கின் லியான் – 13.88% (344,292 வாக்குகள்)
மாதிரி வாக்குகளில் தர்மன் 70 வீத வாக்கை பெற்று முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
தர்மன், தமக்குக் கிடைத்த வலுவான ஆதரவைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகச் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமக்கும் தமது கொள்கைகளுக்கும் கிடைத்துள்ள வாக்குகள், சிங்கப்பூருக்குக் கிடைத்துள்ள “நம்பிக்கை வாக்குகள்” என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.
அவை, ஒளிமயமான வருங்காலம் குறித்த சாதக மனப்பான்மையுள்ள வாக்குகள் என்றார் அவர்.
எதிர்காலத்தில் சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து முன்னேறி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கலாம் என்றும் தர்மன் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதைக் காப்பாற்றப்போவதாக அவர் உறுதிகூறினார்.
தர்மன் 2001ஆம் ஆண்டு முதல் ஜூரோங் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் .
அவர் துணைப்பிரதமர், நிதியமைச்சர், கல்வியமைச்சர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர், இவ்வாண்டு ஜூலை மாதம், அரசாங்கப் பொறுப்புகள் அனைத்திலிருந்தும் விலகினார்.
இந்நிலையில், 9 ஆவது அதிபராக தேர்வு செய்யப்பட்ட தர்மன் சண்முகரத்தினம் செப்டம்பர் 14ஆம் தேதி அதிபராகப் பதவியேற்பார் என்று எனப் பிரதமர் லீ சியன் லூங் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
66 வயதான தர்மன் சண்முகரத்தினம், இவர் யாழ்ப்பாணம் - ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவராவார். இவரின் தந்தை அந்நாட்டின் புகழ்பெற்ற மருத்துவத்துறை பேராசிரியர் கனகரட்ணம் சண்முகரத்தினம் ஆவார். சட்டத்தரணியான ஜேன் யுமிக்கோ இட்டோகியை திருமணம் செய்த தர்மன் சண்முகரத்தினத்துக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.
Leave A Comment