• Login / Register
  • செய்திகள்

    மீண்டும் 'ஃபேமிலி-விசிட் விசா' - குவைத் அரசு திட்டம்!

    வெளிநாட்டினருக்கான 'ஃபேமிலி-விசிட் விசா' வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை மீண்டும் வழங்குவதற்கு குவைத் அரசு தீர்மானித்துள்ளது.

    இதையடுத்து குடும்ப விசாக்கள் தொடர்பான புதிய நிபந்தனைகளை இந்த ஆண்டு இறுதியில் உள்துறை அமைச்சகம் வெளியிடும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    குடும்ப விசாக்கள் வழங்குவதற்கான வழிமுறைகளை மறுமதிப்பீடு செய்வதற்கும், அரசின் உத்தரவின்றி சுற்றுலாவாசிகள் நாட்டில் தங்குவதை தடுக்கவும் புதிய நெறிமுறைகள் வகுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவை தொடர்பான நெறிமுறைகள் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய நெறிமுறைகளானது கிட்டத்தட்ட தயாராக இருக்கும் நிலையில் அவை உள்துறை அமைச்சர் ஷேக் தலால் அல்-கலீதுக்கு உத்தரவிற்காக சமர்ப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டத்தில் பார்வையாளருக்கு ஒரு சிறப்பு அட்டையை வழங்குவதும், பார்வையாளர்கள் 16 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் உடல்நலக் காப்பீட்டைப் பெறுவதை கட்டாயமாக வேண்டும் போன்ற விதிகள் புதிதாக சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குடியிருப்பாளரின் சகோதரர் அல்லது சகோதரிக்கு குடும்ப விசா வழங்கப்படாது என்று ஆதாரங்கள் தெரிவித்தன. மேலும், உடல்நலக் காப்பீட்டுக் கட்டணம் 500 தினார் வரை எட்டலாம் என்றும், விசிட் விசாவிற்கான வருகை காலம் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் விசிட் விசா வழங்குவதற்கான கட்டணம் கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டதை விட 100 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

    அதேபோல் விசிட் விசாவிற்கான காலம் முடிந்தவுடன் சுற்றுலாவாசி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விண்ணப்பதாரர் உறுதி அளிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை சேர்க்கப்படும். அவர்கள் வெளியேறவில்லை என்றால், அவர்களின் விசாவிற்கு விண்ணப்பித்த குடியிருப்பாளர் சட்டப்பூர்வமாக பொறுப்புக் கூறப்படுவார் என்றும் அத்துடன் அவர்களுக்கு விசிட் விசா வழங்குவதை நிரந்தரமாக தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொறுப்பானவர் நிதி மற்றும் நிர்வாக தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என்ற விதியும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment