• Login / Register
  • செய்திகள்

    நாடாளுமன்ற திறப்பு நாள் துக்க நாள் - திருமாவளவன்!

    புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நாளை துக்க நாளாக அனுசரிக்க போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ளநிலையில் அது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருவதுடன் கூட்டாக புறக்கணிகப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் அன்றைய நாளை துக்க நாளாக அனுசரிக்க உள்ளதாகவும் அவிறிக்கப்பட்டுள்ளது.

    மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் ஓட்டலில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவத்தார்.

    இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

    ‘அரசியலமைப்பு சட்டப்படி குடியரசு தலைவர் தான் நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் தலைவர். அத்தகைய அதிகாரம் மிக்கவரை புறக்கணித்து விட்டு பிரதமர் புதிய நாடாளுமன்றத்தை திறக்கிறார்.

    புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் மே 28 அன்று துக்க நாளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அனுசரிக்க உள்ளது. அன்றைய தினம் விசிக உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிய உள்ளோம்.

    சாவர்க்கர் நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்காதவர். அரசமைப்பு சட்ட கோட்பாடுகளுக்கு எதிரானவர். பாசிச கொள்கையை மண்ணில் விதைத்தவர். அவரது பிறந்தநாளில் இது திறக்கப்படுவது உள்நோக்கம் கொண்டது.

    தலைமை செயலகத்தையும் நாடாளுமன்றத்தையும் ஒன்றாக நிர்மலா சீதாராமன் ஒப்பீடு செய்வது சரியல்ல. தலைமை செயலகம் வேறு, நாடாளுமன்றம் வேறு. மத்திய அரசு அதன் தலைமை செயலகத்தை கட்டவில்லை. சட்டம் இயற்றும் நாடாளுமன்ற அவையை கட்டியுள்ளார்கள். எனவே அதை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும்.

    செங்கோலில் மதம் சார்ந்த அடையாளம் இருந்தால் அது அரசமைப்புக்கு எதிரானது. அதில் நந்தி சிலை உள்ளது. எனவே அது அரசமைப்புக்கு எதிரானது. அதனால் தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அரசமைப்பு சட்டத்தின் பக்கம் நிற்கிறோம். என்று தெரிவித்தார்.

    Leave A Comment