• Login / Register
  • செய்திகள்

    ஓ.பி.எஸ்ஸுக்கு அதிமுகவில் இனி எப்போதும் இடமில்லை; ஜெயக்குமார் உறுதி

    அ.தி.மு.கவில் இனி எப்போதும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இடமில்லை என்று முன்னாள் அதிமுக  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, அதிமுக-வில் இருந்து வந்த இணைத் தலைமை நீக்கப்பட்டு ஒற்றைத் தலைமை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பில், சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடத் தடையில்லை என்றும் தீர்ப்பளித்தார்.

    உயர் நீதிமன்ற தீர்பையடுத்து தேர்தல் முடிவுகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் நத்த விஸ்வநாதன் வெளியிட்டனர். இதனையடுத்து அதிமுகவின் 8-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.அதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடிவருகின்றனர்.

    இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்ந்து அங்கம் வகிக்கிறது. தற்போது நிகழக்கூடிய சலசலப்புகள் அடிமட்ட அளவிலேயே நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணிக்கான வாய்ப்பு இல்லை. கட்சியின் சட்டதிட்ட விதிகள் சொல்வதையே நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்ச்சியாக உத்தரவிட்டுவருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதிமுகவில் எப்போதும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடமில்லை’என்று தெரிவித்தார்.


    Leave A Comment