• Login / Register
  • செய்திகள்

    மிரட்டும் கொரோனா; 2 நாட்கள் ஒத்திகை - மத்திய அரசு முடிவு!

    இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுத்துப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 2 நாட்கள் ஒத்திகை பயிற்சி நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் களமிறங்கியது.

    கடந்த மார்ச் 22ஆம் தேதி டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கொரோனா மேலும் பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

    அதன்படி, பிப்ரவரி மாதத்தின் நடுவில் இருந்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா (26.4 சதவீதம்). மகாராஷ்டிரா 21.7 சதவீதம், குஜராத் 13.9 சதவீதம், கர்நாடகா 8.6 சதவீதம், தமிழ்நாடு 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இந்த சூழலில் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து முடிவுகள் விரைவாக கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று  மாநில அரசுகளுக்கு மத்திய அரசு  அறிவுறுத்தியுள்ளது.

    இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பை எதிர்கொள்ள நாடு முழுவதும் ஒத்திகை பயிற்சி நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களின் பொது, தனியார் சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் mock drill எனப்படும் ஒத்திகை பயிற்சி நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவுள்ளது.

    இந்த பயிற்சியில் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களின் மருந்துகள் இருப்பு, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு போன்றவை தயார் நிலையில் உள்ளதா என ஆய்வு செய்யப்படும். இந்த ஒத்திகை பயிற்சியின் விவரங்கள் குறித்து மாநிலகளின் சுகாதாரத்துறையுடன் நாளை ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது.

    Leave A Comment