• Login / Register
  • செய்திகள்

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்; இபிஎஸ் வேட்புமனு தாக்கல்!

    அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அதன் தற்போதைய இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இன்று (18) வேட்புமனு தாக்கல் செய்தார். 

    அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் எதிர்வரும் 26-ம் தேதி நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

    இதையொட்டி அங்கு முன்னாள் அமைச்சர்கள், ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கூடினர். அப்போது, அங்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ் மரியாதை செலுத்தினார். பின்னர், தலைமை அலுவலகத்திற்கு உள்ளே சென்று பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வகையில் உரிய கட்டணம் செலுத்தி வேட்பு மனுவை பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, பின்னர் தாக்கல் செய்தார்.

    அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தலை நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுவை முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோர் முன்மொழிந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர் உட்பட 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிந்துள்ளனர்.

    வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடையும் நிலையில் பொதுச்செயலாளர் பதவிக்காக வேறு யாரும் இதற்காக மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் எனத் தெரிகிறது.  எனவே, அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வருகின்ற 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், அதற்கு மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் கடந்த  2022 ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு, பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்ருந்தமை குறிப்பிடத்தக்கது.

    இதேவேளை, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அவசர வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment