• Login / Register
  • செய்திகள்

    ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; விமானிகள் இருவரும் பலி!

    இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பறந்துகொண்டிருந்த போது நேற்று (16) விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகளும் உயிரிழந்தனர்.


    விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இருவரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:

    அஸ்ஸாமின் சோனித்பூரில் இருந்து அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு 2 விமானிகளுடன் ‘சீட்டா’ ரக ராணுவ ஹெலிகாப்டா் வியாழக்கிழமை புறப்பட்டு சென்றது. ஆனால், மோசமான வானிலை நிலவியதால், தவாங் செல்லாமல் சோனித்பூருக்கே ஹெலிகாப்டா் மீண்டும் புறப்பட்டது.

    அப்போது, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான அந்த ஹெலிகாப்டரின் தொடா்பு துண்டிக்கப்பட்டது.

    பின்னா், மேற்கு கமெங் மாவட்டத்தின் திராங் அருகேயுள்ள மண்டலா பகுதியில் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

    இதுகுறித்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், ராணுவம், இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினா் உள்பட 5 மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்தன.

    இந்த விபத்தில், லெப்டினன்ட் கா்னல் வி.வி.பி.ரெட்டி, துணை விமானி ஏ.ஜெயந்த் ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

    ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கி, தீப்பிடித்ததாக திராங் கிராம மக்கள் தெரிவித்தனா். சம்பந்தப்பட்ட பகுதி, தொலைபேசி இணைப்பு வசதி இல்லாததாகும். அங்கு கடுமையான பனிமூட்டம் நிலவியதாக காவல் துறை கண்காணிப்பாளா் ரோஹித் ராஜ்பீா் சிங் தெரிவித்தாா்.

    Leave A Comment