• Login / Register
  • செய்திகள்

    ஈரோடு இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டி?

    நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் தானே போட்டியிடலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனவரி 27 ஆம் தேதி அறிவிக்கப்படும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து சென்னையில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

    இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் ஜனவரி 27 ஆம் தேதி அறிவிக்கப்படும். தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அமமுக போட்டியிட விரும்புகிறார்கள். நானும் கூட போட்டியிடலாம். தேர்தலில் போட்டியிட எனக்கு பயமில்லை. ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறேன். வருகிற ஜனவரி 27ல் முடிவு அறிவிக்கப்படும்' என்றார். 

    அதிமுக விவகாரம் குறித்து பதில் அளித்த அவர், 'ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே சமரசம் ஏற்பட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்கள் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். இரட்டை இலை சின்னம் இருந்ததாலேயே எதிர்க்கட்சி அந்தஸ்து அதிமுகவுக்கு கிடைத்தது. பணபலத்தை நம்பிதான் இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு அதிமுக போட்டியிடும்' என்றார். 

    ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் மாா்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அதிமுகவே போட்டியிடும் சூழல் உள்ளது. நாம்தமிழர் கட்சியும் தனித்து களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment