'நமக்காக நாம்' யாழ் நகரில் தமிழ் கட்சி தலைவர்கள் பிரசாரம்!
பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் 'நமக்காக நாம்' பிரசார பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினர் பரப்புரை நடவடிக்கையினை இன்று முன்னெடுத்துள்ளனர்.
நடைபெற உள்ள அரசு தலைவருக்கான தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளை சேர்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் இன்று (06) வெள்ளிக்கழமை முற்பகல் 10.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்ட 'நமக்காக நாம்' பரப்புரை நடவடிக்கையில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் த.சித்தார்த்தன் ஆகியோருடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், ந.சிறீகாந்தா, முன்னாள் மாகாணசபை கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், விந்தன் கனகரட்ணம் ஆகியோரும் முன்னாள் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையப் பகுதி உள்ளிட்ட யாழ் நகர் பகுதியில் முன்னெடுத்திருந்த 'நமக்காக நாம்' பரப்புரை நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கி தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு திரட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment