ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, மர்ம நபரும் சுட்டுக் கொலை!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் காயமடைந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ட்ரம்ப்பின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் இடம்பெற்ற பேரணியில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திறந்த மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட போது இலக்கு தவறி அவரது காது பகுதியில் தாக்கியுள்ளது.
ட்ரம்பை நோக்கி அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதனால் அங்கு திடீர் பதற்றம் ஏற்ப்பட்டது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட ட்ரம்ப் கீழே குனிந்து தன்னை பாதுகாத்து கொண்டார். உடனடியாக விரைந்த பாதுகாப்பு தரப்பினர் மேலும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
இத்துப்பாக்கிச் சூட்டில் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
ட்ரம்பின் பிரச்சார கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையில் உள்ள உயரமான கட்டடம் ஒன்றில் இருந்து மர்ம நபர் ஒருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து உடனடியாக செயற்பட்ட அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய குறித்த மர்ம நபரை சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற வன்முறைகளுக்கு அமெரிக்காவில் இடமில்லை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் ட்ரம்ப்பின் உடல் நிலை சீராக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதிபர் பைடன் தெரிவித்தார்.
Leave A Comment