• Login / Register
  • செய்திகள்

    குவைத் தீ விபத்து | மேலும் ஒரு தமிழர் பலி - 35 பேர் ஆபத்தான நிலையில்!

    குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி மேலும் ஒரு தமிழர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் மீட்கப்பட்டவர்களில் 35 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருவதையடுத்து உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் நேற்று (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

    குவைத் - மங்காப்பில் உள்ள தொழிலாளர்கள் தங்கும் மையத்தில் நேற்று அதிகாலை 4.00 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபரும் என்டிபிசி குழுமத்தின் உரிமையாளருமான ஆபிரகாமுக்குச் சொந்தமான குறித்த கட்டடத்தின் கீழ்த்தளங்களில் ஏராளமான இந்தியத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களே தங்கியிருந்துள்ளனர்.

    குறித்த கட்டடத்தின் கீழ்த்தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அடுக்குமாடிக் குடியிருப்பில் கண்ணாடிகள் அதிகம் இருந்ததால் தீ மளமளவென மேல்நோக்கிப் பரவியது. தீவிபத்து நிகழ்ந்ததும் மாடியில் இருந்து பலர் குதித்துத் தப்ப முயன்றனர்.

    தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் வந்து தீயை அணைத்தனர்.  கட்டடத்தின் கீழ் தளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்களால் விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்த நிலையில் 50 இற்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் தமிழர்கள் இருவர் குறித்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் மேலும் ஒரு தமிழர் உயிரிழிந்திருப்பதாக தெரியவந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் தீவிபத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையடுத்து இந்த தீவிபத்தில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

    இதுதவிர உயிரிழந்தவர்களில் கேரளாவை சேர்ந்த 11 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

    இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் இந்திய ரூபாய் நிவாரணம் வழங்க இந்திய பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, இச்சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    Leave A Comment