ஒரே வாரத்தில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா; கட்டுப்படுத்த சிங்கப்பூர் அரசு நடவடிக்கை!
புதிய கொவிட்-19 அலை மிரட்டத் தொடங்கியுள்ள நிலையில் முதியவர்களை தடுப்பூசி போடுவதற்று அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதுடன் இலவச தடுப்பூசி மையங்களையும் திறந்துள்ளது.
உலகெங்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி ஓய்ந்து போயிருக்கும் கொவிட்-19 வைரஸ் பாதிப்பு சிங்கப்பூர் நாட்டில் திடீர் என அதிகரித்துள்ளமை அந்த நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகளாவிய அச்சுறுத்தலாக மாறிய கொரோனா பெருந்தொற்று மெல்ல மெல்ல தணிந்து உலக நாடுகள் வழமைக்கு திரும்பிக் கொண்டிருந்தாலும் பல ஐரோப்பிய நாடுகளில் இப்போதும் அதன் தாக்கம் வெவ்வேறு வடிவங்களில் மக்களிடையே பாதிப்புபளை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் சிங்கப்பூரில் திடீரென கொவிட்-19 இன் புதிய அலை தாக்கம் அந்நாட்டு மக்களை மட்டுமல்லாது அரசாங்கத்தையும் திக்குமுக்காட வைத்துள்ளது.
ஒரே வாரத்தில் சுமார் 26 ஆயிரம் புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து அவசர நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அறுபது வயதுடையவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் உட்பட கடுமையான நோய்க்கு ஆளாகக்கூடிய அதிக ஆபத்தில் இருப்போர், மருத்துவ ரீதியாக பாதிப்புக்கு ஆளாகக்கூடியோர், மூத்தோர் பராமரிப்பு இல்லங்களில் தங்கி இருப்போர் போன்றவர்கள் கடந்த 12 மாதங்களில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில் உடனடியாக தடுப்பூசிப் போட்டுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூர் புதிய கொவிட்-19 அலையை எதிர்நோக்குவதாக திரு ஓங் மே 18ஆம் தேதி கூறினார்.
அடுத்த இரண்டு முதல் நான்கு வாரங்களில் நோய்ப் பரவல் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது மருத்துவமனைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரமற்ற அறுவைச் சிகிச்சைகளை குறைக்கின்றன.
கடந்த மே 5 முதல் மே 11 வரையிலான வாரத்தில் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து 25,900 என்று பதிவானதாக அது தெரிவித்து உள்ளது. அதற்கு முந்திய வாரத்தில் அந்த எண்ணிக்கை 13,700 ஆக இருந்தது.
கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் அன்றாட சராசரி எண்ணிக்கையும் 181 இல் இருந்து 250 ஆக அதிகரித்து உள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 500 ஆக அதிகரித்தால் அது சமாளிக்கக்கூடியது. ஆனால் அந்த எண்ணிக்கை அதன் பிறகும் இரட்டிப்பாகி, 1,000 ஆக அதிகரித்துச் சென்றால் மருத்துவமனை அமைப்பில் கணிசமான சுமையை ஏற்படுத்தும் என்று அமைச்சர் ஓங் முன்னதாகக் கூறியிருந்தார்.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் எண்பது விழுக்காட்டினர் கொவிட்-19 நோய்த் தடுப்பூசியும் கூடுதல் காப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டுக்குள் காப்பூசி பெறவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட கொவிட்-19 நோய்த் தடுப்பூசி, தகுதிபெறும் அனைவருக்கும் தொடர்ந்து இலவசமாகப் போடப்படும். தேசிய நோய்த்தடுப்பு முயற்சியான ‘ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்தில் (ஹெல்தியர் எஸ்ஜி)பதிவுசெய்து கொண்டோர் தீவு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 250 ஆரோக்கியமான எஸ்ஜி மருந்தகங்களில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
அத்தகைய மருந்தகங்களின் கட்டமைப்பும் விரிவுபடுத்தப்படுகிறது. மேலும், அதிகமான மூத்தோரைச் சென்றடையும் முயற்சியாக, வரும் வாரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்பு வட்டாரங்களுக்கு கூடுதல் நடமாடும் தடுப்பூசி மருந்து குழுக்கள் அனுப்பப்படவுள்ளன.
மே 21 முதல் ஜூன் 29 வரை, ஐந்து கூட்டு பரிசோதனை, தடுப்பூசி மையங்களும் சனிக்கிழமைகளிலும் பொது விடுமுறைக்கு முந்திய நாள்களிலும் வழக்கமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலான சேவை நேரத்தை, காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நீடிக்கும்.
கடந்த 12 மாதங்களாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத தனிநபர்களுக்கு சுகாதார அமைச்சு குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது.
அருகிலுள்ள தடுப்பூசி நிலையங்கள், அங்கு வழங்கப்படும் தடுப்பூசி வகைகள் பற்றி அறிந்துகொள்ள https://gowhere.gov.sg/ என்ற இணையத் தளத்தை நாடலாம்.
Leave A Comment