• Login / Register
  • செய்திகள்

    மனித விற்பனை | 13 தமிழ் குழந்தைகள் ஐரோப்பாவிற்கு கடத்தல் - ஒருவர் கைது!

    மனித விற்பனை செயற்பாட்டின் மூலம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பை சேர்ந்த 13 குழந்தைகள் உள்ளிட்ட 17 சிறுவர்கள் இலங்கையில் இருந்து மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு கடத்தப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    குறித்த மனித விற்பனையில் ஈடுபடும் கும்பலை சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்கவில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தெஹிவளையைச் சேர்ந்த 76 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

    17 இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு அனுப்பியதன் மூலம் அவர் மனித கடத்தல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரிடம் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவின் இடர் மதிப்பீட்டு பிரிவிற்கு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் இடர் மதிப்பீட்டுப் பிரிவின் அதிகாரிகள் அவரைக் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

    மேலும் அவர் குறித்து மலேசிய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    2022 டிசம்பர் முதல் 2023 ஏப்ரல் வரை 17 இலங்கைக் குழந்தைகளை மலேசியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அவர்களில் 13 சிறுவர்களின் தகவல்கள் குடிவரவு திணைக்கள பிரிவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இந்தக் குழந்தைகளில் 08 பேர் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மீதமுள்ள 05 பேர்  மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

    இந்த குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து எடுக்கப்பட்டு முதலில் மலேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர், மலேசிய குழந்தைகளாக தேவையான ஆவணங்களைத் தயாரித்து, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு ஆள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த பின்னணியில் கடந்த 25 ஆம் திகதி 14 வயது சிறுவன் ஒருவரை தந்தையுடன் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லவிருந்த ஒருவரை கோலாலம்பூர் விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதன்படி நேற்று காலை 09.30 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியாவின் ஏ.கே. - 047 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட அவர்கள், விமான நிலையத்தில் குடிவரவு திணைக்களத்தின் புலனாய்வு திணைக்களத்தின் இடர் மதிப்பீட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சர்வதேச மனித வியாபாரம் தொடர்பில் எச்சரியாக இருப்போம்...

    நாட்டில் பரவலாக சிறுவர் கடத்தல் சம்பவங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இடம்பெற்று வருகின்றன.

    உலகளாவிய மனித வியாபார முகவர்களுடன் தொடர்புடைய உள்ளுர் முகவர்கள மூலம் கடத்தப்படும் சிறுவர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.

    அநாமதேய சிறுவர் கடத்தல் சம்பவங்கள் மூலமாகவும், ஆசை வார்த்தைகள் மற்றும் அன்பளிப்பு பொருட்களை வழங்கியும் சிறுவர்களை கவர்ந்திழுத்து தம்வசப்படுத்திய பின்னர் இவ்வாறான மனித வியாபாரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

    அதேபோன்று காதல் வலையில் விழ வைத்தும் சிறுவர்களை தம்வசப்படுத்தி பின்னர் மனித வியாபாரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

    அறியா பருவத்து சிறுவர்கள் பெரும்பாலான சந்தரப்பங்களில் தாம் இவ்வாறான கொடூரமான மனித வியாபாரிகளிடம் அகப்படப்போவதனை அறியாதவர்களாகவே பேராபத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.

    ஆகவே வீட்டு வாசலை கடந்து எமது முற்றத்தில் தானே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அலட்சியமாக இருந்துவிடாது பெற்றோர் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிப்பதன் ஊடாகவே இந்த ஆபத்தில் இருந்து எமது பிள்ளைகளை பாதுகாக்க முடியும்.

    சர்வதேச  அளவில் தீவிரம் பெற்றுள்ள மனித வியாபாரத்தின் பின்னணியில் புரளும் பெரும் தொகை பணத்திற்கு மயங்கி உள்ளுர் முகவர்களாக செயற்படுபவர்கள் எமது அயலிலும் இருக்கலாம் என்ற விழிப்புடன் இருப்பதன் ஊடாக இந்த மனித வியாபார சங்கிலியின் தொடக்கத்தை நாம் வேரறுப்பதுடம் எமது பிள்ளைகளையும் நாம் பாதுகாப்ப முடியும்.

    அவசர தொலைபேசி இலக்கம்

    இவ்வாறு ஏதாவொரு சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் உள்ளிட்டோர் தாம் கடத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மனித வியாபாரிகளிடம் அகப்பட்டுள்ளதனை உணர்ந்துகொண்டால் உடனடியாகவே ஐஓஎம் அமைப்பின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு 077 441 0086 தொடர்பினை ஏற்படுத்துங்கள்.

    தொடர்புகொண்டு பேசமுடியாத சந்தர்ப்பமாக இருப்பின் PLS HELP என்று குறுந்தகவலையோ, குரல் பதிவினையோ, இருக்கும் இடத்தின் லொகேசனையோ இந்த இலக்கத்திற்கு அனுப்பினால் பெரும்பாலும் நீங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உங்கள் அன்புக்குரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு வழியேற்படுத்தப்படும்.

    Leave A Comment