• Login / Register
  • செய்திகள்

    காங். எம்.எல்.ஏ. விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்தார்!

    தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி, புது தில்லியில் இன்று (24) சனிக்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

    இந்திய நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும் தொகுதி பங்கீட்டிலும் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் கட்சி தாவல்களும் இடம்பெற்று வருகிறது.

    இந்நிலையில் விஜயதாரணி பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சி அதனை மறுத்து வந்தது.

    இந்த நிலையில் புது தில்லியில், பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மத்திய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில், விஜயதாரணி பாஜகவில் இணைந்தார்.

    தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளு பேத்தியான விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். தற்போது குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

    கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே இவர் கட்சி மாறப் போகிறார் என்பதாகத் தகவல்கள் பரவிவந்தன. காங்கிரஸ் தரப்பில் மறுப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தபோதிலும் விஜயதாரணி தரப்பிலிருந்து எவ்வித மறுப்பும் வராத நிலையில், இன்று அவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

    இதேவேளை, பாஜகவில் இருந்து காயத்திரி ரகுராம், கௌதமி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வெளியேறி அதிமுகவில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment