• Login / Register
  • செய்திகள்

    வடமராட்சியில் டெங்கு அபாயம்; 98 பேர் பாதிப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

    வடமராட்சி பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்களது எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 52 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்வரும் நாட்களில் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    சீரற்ற காலநிலை காரணமாக மழை நிலை தொடர்ந்து வருவதனால் வடமராட்சி உள்ளிட்ட யாழ் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளவர்களது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

    டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், கடந்த செப்டெம்பர் மாதத்தில் 14 பேரும், ஒக்டோபர் மாதத்தில் 32 பேரும் சிகிச்சை பெற்றிருந்த நிலையில் நவம்பர் மாத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

    இவ்வாறு கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 98 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது மழை பெயது வருவதனால் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி வருவதனால் டிசம்பர் மாத்தில் டெங்கு நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கபடாத நிலையில் மேலும் பல டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்குள்ளானோர் சமூகத்தில் காணப்படலாம் எனவும் வடமராட்சியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்குள்ளானவர்களது உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாகவே காணப்படலாம் எனவும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சலை பரப்பும் நுளம்புகள் பெருக்கமடைவதனை தடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment