மயிலத்தமடு அத்துமீறல் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் - பி2பி சீலன் வலியுறுத்தல்!
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் சுமார் 300 இற்கும் அதிகமான சிங்கள குடும்பங்கள் அரச தரப்பு ஆதரவுடன் சட்டவிரோதமாக விவசாய நடவடிக்கைக்காக தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் அத்தனை பேரும் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவருமான சபா.சிவயோகநாதன் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி சட்டவிரோதமாக குடியேறிய 13 பேரை உடனடியாக வெளியேற்றுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் fle;j கடந்த நவம்பர் 13 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தொடர்பில் ஏறாவூர் சுற்றாலா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மூலம் தமிழர்கள் தரப்பில் கூறப்பட்டு வந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பகுதியில் சிங்கள குடியேற்றவாசிகள் அத்துமீறி சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் பண்ணையாளர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் அரசியல் தரப்பினர் தொடர்ந்தும் கூறிவந்த நிலையில் அரச தரப்பில் இருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் சட்டத்துக்கு புறம்பான முறையில் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுமாறு கடந்த ஆண்டு ஜூலை 05ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் மகாவலி அதிகார சபைக்கு கட்டளை பிறப்பித்திருந்தது.
இதற்கமைவாக மகாவலி அதிகார சபையினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு சிலர் வெளியேற்றப்பட்டிருந்தனர். இருப்பினும் பெரும்பாலானவர்கள் தொடர்ந்தும் அங்கு சட்டவிரேதமான முறையில் தங்கியிருந்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் மூலமாக மேலும் பலர் அங்கு குடியேற்றப்பட்டார்கள்.
இவ்வாறு தற்போது சுமார் 300 இற்கும் அதிகமான சிங்கள குடும்பங்கள் மயிலத்தமடு மாபதவனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
குறித்த சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்ற பாரம்பரிய மேய்ச்சல் தரையை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தமிழ்ப் பண்ணையாளர்கள் கடந்த செப்டெம்பர் 15ம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டும் மயிலத்தமடு மாதவனை பகுதியில் சட்டவிரோதமாக பயிற்ச் செய்கையில் ஈடுபட்டு வருபவர்கள் வெளியேற்றப்படாதிருப்பதனை சுட்டிக்காட்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மகாவலி அதிகார சபைக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 19ம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கும் வகையிலேயே மகாவலி அதிகார சபையினால் 13 பேருக்கு எதிராக மட்டும் வழக்கு தொடுக்கப்பட்டு அவர்களை வெளியேற்றுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற தீர்ப்பின் பின்னதாக கண்துடைப்பு நடவடிக்கை மேற்கொண்டு சிலரை மட்டும் வெளியேற்றிவிட்டு ஏனையவர்களது சட்டவிரோத பிரசன்னத்தை கண்டும் காணாது இருப்பதை போன்று தற்போதும் ஏற்பட்டுவிடக்கூடாது.
இந்நிலையில், மயிலத்தமடு மாதவனை பகுதியில் சட்டவிரோதமாக பயிற்ச்செய்கையில் ஈடுபட்டு வருபவர்களுக்கு கொழும்பை சேர்ந்த புத்த பிக்கு தலைமையில் சென்ற குழுவினால் நேற்றைய தினம்(13) நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இதன்போது கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரசன்னமாகியிருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
மயிலத்தமடு மாதவனை பகுதிக்கு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் செல்லவிடாது தடுக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு புத்த பிக்கு தலைமையிலான குழுவினர் அங்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை ஆட்சி அதிகார தரப்பினரது பக்கச்சார்பான நிலைமையை வெளிப்படுத்தியுள்ளது.
மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேற்றப்பட்டவர்கள் மூலம் சட்டவிரோத பயிற்ச்செய்கை இடம்பெற்று வருவதாக தமிழர்கள் தரப்பில் சுட்டிக்காட்ப்பட்டு வந்த விடயம் ஏறாவூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக குறித்த 13 பேரையும் அங்கிருந்து வெளியேற்றுவதுடன் ஏனைய சட்டவிரேத பயிற்செய்கையாளர்களையும் வெளியேற்றி மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகளை சுதந்திரமான முறையில் மேய்ச்சலுக்கு விடவும் தமிழ் பண்ணையாளர்களை அழிவில் இருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கையினை சம்பந்தப்பட்ட மகாவலி அதிகார சபை உள்ளிட்ட அரச தரப்பினர் முன்வர வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.
Leave A Comment