நடிகை விஜயசாந்தியும் பாஜகவில் இருந்து விலகினார்: தொடரும் வெளியேற்றம்
தெலுங்கனாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.
மேலும் அவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சில முக்கியத் தலைவர்கள் விலகி வருகின்றனர். அந்த வகையில் நடிகை விஜயசாந்தி தனது பதவி விலகல் கடிதத்தை மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் அதிருப்தியில் அவர் கட்சியில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே காங்கிரஸ் தலைவர்கள் விஜயசாந்தியுடன் தொலைபேசி வாயிலாக கட்சியில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாகவும், விரைவில் அவர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரஸில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
நடிகை விஜயசாந்தி கடந்த 1997 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதனை அடுத்து அவர் 2005 ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விளங்கி தனிக்கட்சி தொடங்கினார். அதன் பின்னர் அவர் சந்திரசேகர் ராவ் அவர்களின் டிஆர்எஸ் கட்சியில் இணைந்தார்.
2009 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எம் பி ஆன நிலையில் 2014 ஆம் ஆண்டு திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனை அடுத்து 2020 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்ற அவர் தற்போது மீண்டும் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளார்.
தெலங்கானாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜகோபால் ரெட்டி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விவேக் வெங்கடசாமி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அண்மையில் விலகினர்.
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டமன்றத்திற்கு வரும் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
Leave A Comment