தோசை கல்லில் ஒட்டிக்கொள்கிறதா..? மொறுமொறுப்பான தோசைக்கு சூப்பர் டிப்ஸ்..!
என்னதான் தோசையை யாரும் சுட்டு தந்து சாப்பிட்டாலும் நாமே தோசை சுட்டு சாப்பிடுவதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. . ஆனால் அதை சரியாக சுடவேண்டுமே! தோசை சுடும்போது இரும்பு தவாவில் அது ஒட்டிக்கொள்வது அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சினைதான்.
நான் ஸ்டிக் தவா வாங்கி பயன்படுத்தினாலும் இரும்பு தவாவில் தோசை சுட்டு சாப்பிடும் சுவைவராது. எப்போது தோசை சுட்டாலும் கல்லில் அடியோடு ஒட்டிக்கொண்டு எடுக்கவே சிரமமாக இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்களுக்கு இந்த டிப்ஸ் உதவியாக இருக்கும்.
* தோசை சுடுவதற்கு முன் தோசை கல் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே தோசை கல்லில் படிந்திருக்கும் தூசு, கடைசியாக சுட்ட தோசையின் மிச்சம், அடி பிடித்த துகள்கள் இருப்பின் அவற்றை முற்றிலுமாக நீக்கி சுத்தம் செய்துகொள்ளுங்கள். அதற்காக தோசை கரண்டியை போட்டு தேய்க்கக் கூடாது. அவ்வாறு செய்தால் கல்லில் கீரல் விழுந்து தோசை வராது. எனவே காட்டன் துணி பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
* கல்லை சுத்தம் செய்த பின் அடுத்த ஸ்டெப்பாக உருளைகிழங்கு அல்லது வெங்காயத்தின் கால் பகுதியை நறுக்கிவிட்டு எண்ணெயில் முக்கி நன்கு தோசைக்கல்லில் தேய்க்கவும். அதிக எண்ணெய் விட்டு தேய்க்கக் கூடாது பின் தோசை மாவு கல்லில் ஒட்டாது. எனவே ஒரு சொட்டு எண்ணெய் விட்டு கல் முழுவதும் தேய்க்க வேண்டும்.
* எண்ணெய் தேய்த்த பின் மாவு ஊற்றி வட்டமாக சுற்றுங்கள். பின் மேலே எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக சிவந்ததும் தோசையை கரண்டியால் லாவகமாக எடுக்க அழகாக ஒட்டாமல் வந்துவிடும்.
* பொதுவாக அனைவரும் செய்யும் தவறு என்னவென்றால், ஃப்ரிட்ஜில் வைத்திருந்த மாவை நேரடியாக அப்படியே அடுத்து தோசை சுடுவார்கள். இது தவறான பழக்கம். தோசை சுடப்போகிறீர்கள் எனில் மாவை 15 அல்லது 20 நிமிடங்களுக்கு முன்பாகவே எடுத்து வெளியே வைத்துவிடுங்கள். இவ்வாறு செய்தால் மாவு சுடும்போது நன்றாக வரும். அதேசமயம் கல்லிலும் ஒட்டாது.
* தோசை சரியாக வராததற்கு தண்ணீர் பதம் சரியாக இல்லாததும் ஒரு காரணம். அதாவது நீங்கள் தோசை சுடுவதாக இருந்தால் அதிகமாக தண்ணீர் ஊற்றக்கூடாது. அவ்வாறு ஊற்றினால் தோசை கல்லில் ஒட்டிக்கொள்ளும். எனவே சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.
* நீங்கள் தோசை கல்லில் மாவு ஊற்றுவதற்கு முன் எண்ணெய் அதிகமாக ஊற்றி தேய்த்துவிட்டால் மாவு தோசைக்கல்லில் ஒட்டாது. எனவே அந்த தவறை செய்யாதீர்கள்.
* தோசைக்கல்லை அடிக்கடி தேய்த்தாலும் தோசை வராது. தோசை சுட்ட பின் அதை காட்டன் துணியால் துடைத்து தட்டுபோட்டு மூடி வையுங்கள். வாரம் ஒரு முறை தேய்த்தால் போதும். அதுவும் சோப்பு ஆயிலை கையில் ஊற்றி தேயுங்கள். ஸ்கிரப் கொண்டு தேய்த்தால் கீரல் விழுந்து தோசை வராமல் போக காரணமாகிவிடும். துலக்கியபின் தோசைக்கல் ஈரம் காய்ந்ததும் ஒரு துளி எண்ணெய் ஊற்றி தடவி வையுங்கள். கல்லில் எண்ணெய் தன்மை இருக்க வேண்டும். அப்போதுதான் தோசை நன்கு வரும்.
Leave A Comment