• Login / Register
  • மேலும்

    ககன்யான் சோதனை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு!

    மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் முயற்சியான ககன்யான் திட்டத்தின் சோதனை பயணம் இன்று (21) சனிக்கிழமை காலை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    2025ல் மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சனிக்கிழமை (அக். 21) காலை 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. டிவி - டி1 ராக்கெட் மூலம் தரையில் இருந்து 17 கிலோ மீட்டா் தொலைவு வரை விண்கலத்தை அனுப்பி மீண்டும் தரையிறக்கப்பட்டது.

    சரியாக 16.6 கிமீ தூரம் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் இருக்கும் பகுதி தனியாகப் பிரிந்த பின்னர், பாராசூட் மூலமாக விண்கலம் மட்டும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் வங்கக்கடலில் இறக்கப்பட்டது. தொடர்ந்து, கடலிலிருந்து கலன் மீட்கப்படும். 

    ​இந்த சோதனை முடிந்ததையடுத்து, 'ககன்யான் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

    மேலும் இஸ்ரோவில் விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

    முன்னதாக, மனிதா்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் வகையிலான மாதிரி கலனை டிவி - டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதற்கான முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (21) சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சீரற்ற வானிலை காரணமாக காலை 8.30 மணிக்கு ஏவப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு 5 வினாடிகளுக்கு முன்பு சோதனை நிறுத்தப்பட்டு வேறொரு நாளில் ககன்யான் விண்கலம் சோதனை நடைபெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment