• Login / Register
  • மேலும்

    ககன்யான் சோதனை ஒத்திவைப்பு - இஸ்ரோ அறிவிப்பு!

    ககன்யான் திட்டத்தில் இன்று (அக்-21) நடக்கவிருந்த மாதிரி விண்கல சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    மனிதா்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் வகையிலான மாதிரி கலனை டிவி - டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதற்கான முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (21) சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வானிலை காரணமாக காலை 8.30 மணிக்கு ஏவப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. 

    இந்த நிலையில், விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு 5 வினாடிகளுக்கு முன்பு சோதனை நிறுத்தப்பட்டு வேறொரு நாளில் ககன்யான் விண்கலம் சோதனை நடைபெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

    மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட பணியில் இஸ்ரோ தீவிரமாக உள்ளது. இந்த ககன்யான் திட்டம் வரும் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது.

    அதற்கு முன்பாக மூன்று கட்ட சோதனைகளை மேற்கொள்கிறது இஸ்ரோ. அதன்படி முதற்கட்ட சோதனை இன்று மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சோதனையின் மூலம் மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்லவுள்ள மாதிரி விண்கலம் விண்ணில் செலுத்தப்படும்.

    தரையில் இருந்து 17 கி.மீ. தூரம் வரை இந்த விண்கலம் அனுப்பப்படும். பின்னர் மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்படும் இந்த விண்கலம் வங்கக்கடலில் இறக்கப்பட திட்டமிடப்பட்டிருந்து.

    17 கிலோ மீட்டர் உயரத்தில் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்துவிடும். பின்னர் பாராசூட்டுகள் மூலம் வங்கக்கடலில் இறக்கப்பட்டு சோதனை செய்யப்படும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment