வீட்டிலேயே பொன்னாங்கண்ணி எளிய முறையில் வளர்ப்பது எப்படி..!
பொன்னாங்கண்ணி கீரை உடலுக்கு பலவகையிலும் நன்மை தரக்கூடியது, பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக கழுவி, சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தம் தூய்மை அடையும்.
பொன்னாங்கண்ணி கீரையில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் இரும்பு சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை இதில் வளமான அளவில் உள்ளது.
பொன்னாங்கண்ணி கீரை ஆரோக்கியமான சருமத்தை தரும் ஆற்றல் கொண்டது. பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும், அழகு மேம்படும்.
இதனை 'பொன் ஆம் காண் நீ' இதனை உண்ண உன் உடல் பொன்னாக காண்பாய் என்ற வழக்கிற்கேற்ப இந்த மூலிகையின் பெயர் அமைந்துள்ளது என கூறுவர். இதனாலேயே இது கற்பக மூலிகை வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல நன்மைகளை தரக்கூடிய பொன்னாங்கண்ணியை வீட்டிலேயே எளிமையாக பயிரிடலாம். அதனை வீடுகளில் எளிய முறையில் பராமரிக்கலாம்.
மண் தொட்டியில் மணல், மண் புழு உரம், வேப்பம் புண்ணாக்கு இவற்றை 3:1:1 என்ற விகிதத்தில் கலந்து தொட்டியில் நிரப்பி வேர்ச் செடிகள் அல்லது நுண்தண்டுகளை நட வேண்டும்.
பின்னர் பூவாளி வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும். இதற்காக மண்புழு கம்போஸ்ட் உரத்தை பயன்படுத்தலாம். ஒவ்வொரு மண் தொட்டிக்கும் 500 கிராம் மண்புழு கம்போஸ்ட் உரத்துடன், நன்மை தரும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, மைக்கோரைசா ஆகியவற்றை தொட்டிக்கு தலா 50 கிராம் வீதம் கலந்து ஆண்டுக்கு 2 முறை (6 மாத இடைவெளியில் இட வேண்டும்.) மண்ணை நன்றாக வெட்டி ஒரு சதுர மீட்டர் பாத்திக்கு 2 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தை இட்டு மண்ணுடன் கலக்கி இட அளவுக்கேற்ப சிறிய பாத்திகளை அமைக்கலாம்.
வோ்களை உடைய பக்க செடிகளை நடவுக்கு பயன்படுத்தலாம். பாத்தியில் ஒரு அடி இடைவெளியில் செடிகளை நடவு செய்வது நல்லது. தொட்டியில் பராமரிக்கும்போது 3 மாதங்களுக்கு ஒரு முறை இயற்கை உரங்களான மண்புழு உரம் மற்றும் கம்போஸ்ட் (தொட்டிக்கு 1 கிலோ) இட வேண்டும். தொட்டியிலும், பாத்தியிலும் செடிகளுக்கு தகுந்த ஈரப்பதம் இருக்கும் வகையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
இலைகள் அதிகம் தழைத்து வர இயற்கை உரங்களான பஞ்சகாவ்யா (லிட்டருக்கு 3 மி.லி. அளவு) தெளிப்பது நல்லது. செடிகளை நட்ட 4-வது மாதத்தில் இலைகளை தண்டுடன் கிள்ளி அறுவடை செய்யலாம்.
தரை மட்டத்தில் இருந்து 5 செ.மீ. உயரத்தில் முழு செடியை வெட்டி எடுக்கலாம். மேலும் விவரங்களுக்கு 91717 17832 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணை பேராசிரியர் சி.ராஜா பாபு தெரிவித்துள்ளார்.
Leave A Comment