• Login / Register
  • மேலும்

    SSLV T-2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது!

    இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன் இன்று வெள்ளிக்கிழமை (பிப்.10) விண்ணில் ஏவப்பட உள்ளது.

    இதற்கான 6.30 மணி நேர கவுன்ட்-டவுன் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.48 மணிக்கு தொடங்கவுள்ளது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து காலை 9.18 மணியளவில் ராக்கெட் ஏவப்பட உள்ளது.

    எடை குறைந்த செயற்கைக்கோள்களை (500 கிலோ வரை) புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல சிறியரக எஸ்எஸ்எல்வி (ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிகிள்-எஸ்.எஸ்.எல்.வி). ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்து வருகிறது. 120 டன் எடைகொண்ட இந்த ராக்கெட்டுக்கான செலவு ரூ. 30 கோடிக்குள் அடங்கிவிடும்.

    இந்த எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் மூலம் ஏற்கெனவே, மைக்ரோ செயற்கைக்கோளை கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. ஆனால், தொழில்நுட்ப பிரச்னை காரணமாக திட்டம் வெற்றியடையவில்லை. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி-2 ரக ராக்கெட்டை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது.

    மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட் மூலம் தற்போது 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. முதன்மைச் செயற்கைக்கோளான இஒஎஸ்-7, 156 கிலோ எடை கொண்டது. இது புவி கண்காணிப்பு மற்றும் எதிா்கால தேவைக்கான ஆய்வு பணிகளுக்காக அனுப்பப்படுகிறது. அதனுடன் அமெரிக்காவின் ஜானஸ், இந்தியாவின் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் மூலம் 750 பள்ளி மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆசாதிசாட்-2 ஆகிய 2 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.

    இந்த சிறிய ரக ராக்கெட்டின் இரண்டாவது பயணம் வெற்றி அடையவேண்டும் என்பதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் மாதிரியுடன் திருப்பதி திருமலை கோயிலில் வியாழக்கிழமை (பிப்.9) வழிபாடு நடத்தினா். இஸ்ரோ இயக்குநா் ஏ.கே.பாா்த்தா, துணை இயக்குநா் சீனிவாஸ் குப்தா, தலைமைச் செயலா் யசோதா ஆகியோா் இந்த வழிபாட்டில் பங்கேற்றனா். அவா்களுக்கு தேவஸ்தானம் சாா்பில் தீா்த்த பிரசாதங்கள், வேத ஆசீா்வாதம் வழங்கப்பட்டன.

    முன்னதாக, எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட் மாதிரிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    Leave A Comment