மன்சூர் அலிகான் தற்காலிக நீக்கம்? நடிகர் சங்கம் அதிரடி - பொது மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!
நடிகை த்ரிஷா தொடர்பில் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நடிகர் மன்சூர் அலிகான் பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள நடிகர் சங்கம் அதுவரை அவரை ஏன் தற்காலிகமாக நீக்கக்கூடாது என கருதுவதாகவும் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் நடிகர் விஜய் இன் லியோ திரைப்படத்தில் த்ரிஷா - மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தன.
மன்சூர் அலிகானின் சர்ச்சைக்குரிய பேச்சு...
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், "த்ரிஷாவுடன் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் கண்டிப்பாக அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும்; குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் அவரையும் தூக்கி போடலாம் என்று நினைத்தேன். இத்தனை வருடங்களில் சினிமாவில் நான் பண்ணாத அட்டூழியமா. ஆனால் காஷ்மீரில் த்ரிஷாவை எனது கண்ணிலேயே காட்டவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.
த்ரிஷா பதிலடி...
த்ரிஷா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று எனது கவனத்துக்கு வந்தது. அவரது பேச்சினை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆணாதிக்க மனநிலை மற்றும் அவமரியாதை செய்யும் விதம்இ பெண் வெறுப்பை பரப்பும் வகையிலும் அவரது பேச்சு இருக்கிறது.
என்னுடன் நடிக்க அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால் அவர் போன்ற ஒரு கேவலமான ஒரு மனிதருடன் நான் நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு மேலும் என்னுடைய கரியர் முழுவதும் அவருடன் நடிக்கமாட்டேன் என்பது உறுதி. இவரைப் போன்றவர்கள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கு இழுக்கு" என காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட்
த்ரிஷாவின் ட்வீட்டை ரிட்வீட் செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், "மன்சூர் அலி கான் கூறிய கருத்துக்கள் மோசமானதாகவும் கோபமடைய வைப்பதாகவும் இருக்கிறது. பெண்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். இதைச் சமரசம் செய்து கொள்ளவே முடியாது. அவரது இந்த பேச்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மட்டுமின்றி, மன்சூர் அலிகானின் ஆபாசமான பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்..
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “திரைத்துறையில் பெண்கள் நுழைவதும் சாதிப்பதும் இன்னும் சவாலாகவே இருக்கும் இன்றைய சூழலில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதித்து வரும் நடிகைகளை பற்றி இப்படி மோசமான கருத்துகளைத் தெரிவித்தது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைகள் உடன் நிற்கும்.
சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகானை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களால் கவனிக்கப்படும் பிரபலங்களாக இருக்கும்போது, தான் உதிர்க்கும் கருத்துகளும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வின்றி அவர் பேசியது மிகவும் தவறாகும். எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம்.
தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என தென்னிந்திய நடிகர் சங்கம் கருதுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave A Comment