30 ஆண்டுகளில் 50 வயதிற்குட்டபட்டவர்களின் புற்றுநோய் பாதிப்பு 79% அதிகரிப்பு!
கடந்த 30 ஆண்டுகளில் 50 வயதுக்கு குறைவானவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது 79 சதவீதம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பிரிட்டிஷ் மருத்துவ இதழில் (புற்றுநோயியல்) வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 1990-ஆம் ஆண்டு உலக அளவில் பல்வேறு வகையானா புற்றுநோயால் 50 வயதுக்கு குறைவானவர்களில் 18.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனார். இது 2019-ஆம் ஆண்டு 38.2 லட்சமாக அதிகரித்தது. இதே காலகட்டத்தில் 50 வயதுக்கு குறைவானவர்கள் புற்றுநோயால் உயிரிழப்பது 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
2019-ஆம் ஆண்டில், மார்பகப் புற்றுநோயால்தான் 50 வயதுக்கு குறைவானவர்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால், 1990-ஆம் ஆண்டு முதல் அந்த வயதுக்குட்பட்டவர்கள் மேல் தொண்டை மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
1990 முதல் 2019-ஆம் ஆண்டு வரை, ஆண்டுதோறும் 50 வயதுக்குட்பட்டவர்கள் மேல் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்படுவது 2.28 சதவீதமும், ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுவது 2.23 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அதேவேளையில், அந்த வயதுக்குட்பட்டவர்கள் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவது 2.88 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்பட 204 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 29 வகையான புற்றுநோய்கள் குறித்து, உலக அளவில் நோய்ச் சுமை அறிக்கை 2019-இல் இடம்பெற்ற புள்ளிவிவர ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, பிரிட்டிஷ் மருத்துவ இதழில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது .
நன்றி தினமணி
Leave A Comment