அதிக உப்பை எடுத்துக்கொள்ளாதீர்கள் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகம் முழுவதும் உப்பின் பயன்பாடு அதிகரித்து வருவதால் தனிநபர் நலனில் அது பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது இந்த நிலையில் வரும் 2025ஆம் ஆண்டுக்குள், உலகமே, தாங்கள் எடுத்துக் கொள்ளும் சோடியம் எனப்படும் உப்பின் அளவை 30 விழுக்காடு குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் முதல் முறையாக இது போன்றதொரு அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவும், உடலுக்கு மிகவும் தேவையான அடிப்படை ஊட்டச்சத்தாக விளங்கும் சோடியம் சற்று அதிகரித்தாலும் இதய நோய், பக்கவாதம், ஆயுள்காலம் குறைவது போன்றவை நேரிடுகிறது என எச்சரித்துள்ளது.
குறித்த அறிக்கையில் சோடியம் என்பது பெரும்பாலும் தூள் உப்பு மூலமாகத்தான் உடலுக்குச் செல்கிறது. அதேவேளையில், சோடியம் க்ளூடாமேட் என்பது, இயற்கையாகவே சில உணவுபொருள்களில் நிறைந்திருக்கும். சில உணவுபொருள்களில் ருசிக்காக சேர்க்கப்படுகிறது.
அதாவது, உலகம் முழுவதும் உப்பு உள்கொள்ளும் அளவை கண்டறிந்து, ஒருவரது சராசரி உப்பு உள்கொள்ளும் அளவு கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது ஒருவர் ஒரு நாளைக்கு 10.8 கிராம் உப்பை உட்கொள்கிறார்கள். இது உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தும் அளவான 5 கிராமுக்கும் குறைவானது என்ற அளவை விட இரண்டு மடங்குக்கும் சற்று அதிகம். அதாவது ஒரு டீஸ்பூன் உப்பு அதிகமாக சாப்பிடுகிறோம்.
உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகளில் 5 சதவிகிதம் மட்டுமே கட்டாய மற்றும் விரிவான சோடியம் குறைப்புக் கொள்கைகளால் பாதுகாக்கப்படுவதாகவும், 73 சதவிகித உறுப்பு நாடுகள் அத்தகைய கொள்கைகளை முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதேவேளையில், பொட்டலமிடப்பட்ட உணவுகளில் சோடியம் இருப்பதை இந்தியா கட்டாயமாக அறிவிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த கட்டாய நடவடிக்கையும் இல்லை இந்தியா மேற்கொள்ளவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிகவும் செலவில்லாமல், சோடியத்தைக் குறைக்கும் கொள்கையானது முறையாக செயல்படுத்தப்பட்டால், 2030ஆம் ஆண்டு வாக்கில் 70 லட்சம் மக்களின் உயிர் காப்பாற்றப்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
தொற்றுநோய் அல்லாத நோய்களால் மக்கள் இறப்பதைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உணவு பொருள்கள் வாயிலாக ஏற்படும் பல நோய்களில், சோடியம் ஏற்படுத்தும் தாக்கம் மிகக் கடுமையானது என்கறிர்கள்.
உப்பைக் குறைப்பது தொடர்பாக மிகப்பெரிய அளவில் மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், உப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பாக பல்வேறு ஆவணங்களையும் உலக சுகாதார நிறுவனம் இணைத்துள்ளது.
என்ன செய்யலாம்?
பொதுவாக சமைக்கும் போது பாதி அளவு உப்பு சேர்த்து சமைத்து அதனை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எக்காரணம் கொண்டும் சாப்பிடும் மேஜையில் உப்பு ஜாடிகளை வைத்துக் கொள்ள வேண்டாம்.
உப்பு குறைவாக இருந்தாலும் அதனை உப்பு சேர்க்காமல் சாப்பிட பழகலாம்.
உப்பு அதிகமாக சேர்த்து பொட்டலம் செய்யப்பட்ட உணவுகளை அறவே ஒதுக்கிவிடலாம்.
உப்பு சேர்த்து செய்யும் ஊறுகாய் உள்ளிட்டவற்றை அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.
இதுவரை விலை குறைவு என்பதால் எவ்வளவு உப்பு வாங்குகிறோம் என்று கவனிக்காமல் இருந்திருப்போம். இனி, ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு எவ்வளவு உப்பு வாங்குகிறோம் என்பதை கணக்கிட்டு பார்த்து வாங்கிப் பயன்படுத்தலாம்.
Leave A Comment