வியப்பு + விறுவிறுப்பு = மாநிலங்களவைத் தேர்தல்
15 மாநிலங்கள்…57 இடங்கள்..
ஆம். தமிழகம், கர்நாடகம், ஹரியானா, ராஜஸ்தான் உள்பட 15 மாநிலங்களில், 57 மாநிலங்களவை
உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம்தேதி நடைபெற உள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ரன்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத்
திவாரி ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. மற்றொருபுறம் மிகப்பெரிய மீடியா அதிபரான
சுபாஷ் சந்திரா ராஜஸ்தானில் களமிறங்கியுள்ளார். சுபாஷ் சந்திரா எஸ்செல் குழுமம்,
ஜீ குழுமம் போன்ற ஊடக நிறுவனங்களின் தலைவர் ஆவார். இவருக்கு பாரதிய ஜனதா ஆதரவு
தருவதாக அறிவித்துள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு ஆதரவு தரும் 11 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின்
வாக்குகள் முக்கியம். ஆனால், அந்த 11 சுயேச்சை எம்எல்ஏக்களில் ஒருவரான சன்யம் லோதா
என்பவர், ‘காங்கிரஸ் ஏன் ராஜஸ்தான்
மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு சீட் தராமல் வெளியாட்களுக்கு சீட் தருகிறது?’ என
கேட்டு பிரச்சினை எழுப்பியுள்ளார்.
ராஜஸ்தானில் தற்போதுள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி நிறுத்தியிருக்கும்
முதல் இரு வேட்பாளர்களான ரன்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் இருவரும்தான்
ஜெயிக்க முடியும் போல தோன்றுகிறது. 3ஆவது வேட்பாளரான பிரமோத் திவாரியின் பாடு
திண்டாட்டம்தான்.
மீடியா அதிபர் சுபாஷ் சந்திராவின்
வருகை காரணமாக பிரமோத் திவாரிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மீடியா அதிபர் சுபாஷ் சந்திரா வெற்றி பெற 41 ஓட்டுகள் தேவை என்ற நிலையில்,
அவர் ஏற்கெனவே பாரதிய ஜனதாவின் 30 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் இருக்கிறார்.
ஆர்.எல்.பி. கட்சியின் 3 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது.
இந்தநிலையில் இன்னும் 8 ஓட்டுகள்தான் அவருக்குத் தேவை.
ஹரியானாவில் காங்கிரஸ் வேட்பாளரான அஜய் மக்கானின் கதையும் சிக்கலாகவே
இருக்கிறது. மக்கானுக்கு ஏற்கெனவே 31 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது.
இந்தநிலையில் கூடுதல் வேட்பாளராக கார்த்திகேய சர்மா என்பவரை பா.ஜ.க, ஹரியானாவில்
நிறுத்தியிருக்கிறது. இது அஜய் மக்கானுக்கு சிக்கலாக முடியும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் குழு மோதல், அஜய் மக்கானின்
வெற்றிக்கு உலை வைத்துவிட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
மாநிலங்களவைத் தேர்தலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகத்தில்
போட்டியிடுவதால், கர்நாடகம் இந்தமுறை அதிக கவனம் பெற்று வருகிறது. கர்நாடகத்தில் ,
நடிகர் ஜாகேஸ் என்பவரையும் பாரதிய ஜனதா வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் 4 மாநிலங்களவை இடங்கள் காலியாக இருக்கிற நிலையில், காங்கிரஸ்,
பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளுமே கூடுதல் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. கர்நாடகத்தில்
பாரதிய ஜனதாகட்சியின் கூடுதல் வேட்பாளர்களில் லகார்சிங்கும் ஒருவர்.
கர்நாடகத்தில் ஒவ்வொரு வேட்பாளரும் வெற்றி பெற 45 ஓட்டுகள் தேவை. பா.ஜ.க.வுக்கு
119 எம்எல்ஏக்கள் இருக்கிற நிலையில், 2 எம்.பி. இடங்களை அந்தக் கட்சி எளிதாகப்
பெற்றுவிடும். மத்திய நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன், நடிகர் ஜாகேஸ் ஆகியோர் எளிதாக வெற்றிபெற்று விடுவார்கள்.
இதுபோக 29 ஓட்டுகள் உபரியாக இருக்கும்.
காங்கிரஸ் கட்சிக்கு 69 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அதனால் முதல் வேட்பாளர்
ஜெய்ராம் ரமேஷ் எளிதாக வென்று விடுவார். 24 ஓட்டுகள் மீதம் இருக்கும்.
கர்நாடகத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியும் மாநிலங்களைவத் தேர்தலில் குபேந்திர
ரெட்டி என்கிற வேட்பாளரை நிறுத்தியுள்ளது. ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 31 எம்எல்ஏக்கள்
இருக்கிறார்கள். (இதில் 5 பேர் கட்சியின் கொறடா சொல்கிற வேட்பாளருக்கு ஓட்டுப் போட
மாட்டோம் என்று மறைமுக போர்க்கொடி தூக்கியிருப்பது
தனிக்கதை)
கர்நாடகத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா
கட்சிகள் கூடுதல் வேட்பாளர்களை நிறுத்தாமல் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளருக்கு
ஆதரவு தர வேண்டும் என்று அந்தக் கட்சி விரும்புகிறது. ஆனால், கர்நாடகத்தில் காங்கிரஸ்,
பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளுமே கூடுதல் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஜனதாதளம்
(எஸ்) கட்சி வேட்பாளரை கார்னர் செய்வதில் இந்த இரு கட்சிகளும் மும்முரமாக
இருக்கின்றன.
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இம்ரான்
பிரதாப்காரி என்பவரை வேட்பாளராக நிறுத்தியிருப்பதால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்
கட்சி ஆகிய 2 கட்சிகளுமே அதிருப்தியில் இருக்கின்றன. பாரதிய ஜனதா மகாராஷ்டிரத்தில்
தனஞ்செய் மகாதிக், என்ற கூடுதல் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
பிகார் மாநிலத்தில் வேறு மாதிரியான சிக்கல். பிகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம்
ஆட்சியில் உள்ளது. நிதிஷ்குமார் முதல்வராக இருக்கிறார். இவரது கட்சியைச் சேர்ந்த
ஆர்.சி.பி.சிங், மத்திய அமைச்சராக இருக்கிறார்.
ஆர்.சி.பி.சிங்கின் எம்.பி. பதவிகாலம் முடிவடைய உள்ள நிலையில், முதல்வர்
நிதிஷ்குமார், மாநிலங்களவை எம்.பி.தேர்தலில் ஆர்.சி.பி.சிங்குக்கு வாய்ப்பளிப்பார்
என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதிஷ்குமார் இவருக்கு சீட் தராமல், கீரு மஹதோ
என்பவருக்கு சீட் வழங்கி இருக்கிறார். இதனால் ஆர்.சி.பி.சிங்கின் மத்திய அமைச்சர்
பதவி ஆட்டம் கண்டுள்ளது.
இதுபோன்ற பல விநோதங்களுடன் விறுவிறுப்புகளுடன் களைகட்டி வருகிறது மாநிலங்களவைத்
தேர்தல் களம்.
Leave A Comment